காதலி(ன்) அதிகாரங்கள்....

உன்னை எதிர்பார்ப்பதைப்
அதிகப்படுத்தவே
உனது அனைத்து
வருகைகளும்
தாமதமாகின்றனவோ!

உனது ஒற்றை
வார்த்தைப்பதில்கள்

என்னை நீண்ட
நேரம் உரையாட
வைக்க முயல்கின்றனவோ!

உனது அதிகாரங்கள்
அனைத்தும்-என்னைத்
திருக்குறளைப் போல்
நெறிப்படுத்துகின்றனவோ!

குழந்தைத்தனமாக நீ
செய்யும் தவறுகள்
அன்னையைப்போல் – என்னை
ரசிக்க வைகின்றனவோ!

உனது மௌனமான
தருணங்கள்
நான் அதிகம்
வாசிக்க விரும்பும்
புராணங்கள்...

என்னை விட்டு
நீங்கிசெல்வது
உன்னை நான்
நெருங்கி வருவதற்கான
முதல் அழைப்புமணி.

அமைதியான
கண்கள்கூட
காதலில் –என்னை
ஆட்சி செய்கின்றன.

உனக்கெதிரான
சந்தேகங்கள் –என்
நம்பிக்கைக்கு முன்
அடிமையாகின.

நீ செய்யும்
தவறுகள் கூட
அனுபவம் என்ற
அழகான  அர்த்தமாகின்றன.

புரட்சிகரமான வார்த்தைகள்
செவிமடல்களை
எட்டும்போது
எண்ணப்பேரலைகள்
கடல் அலைகளைப்போல்
எழுச்சியடைகிறது.

கர்ணனைப்போல்
நீ செய்யும்
தியாகத்திற்காக
என் சுவாசத்தினையும்
தியாகம் செய்திடுவேன்.

உனக்காக எதையும்
விட்டுக்கொடுப்பேன்
உன்னையே
விட்டுக்கொடுக்க சொன்னால்
உயிரைவிட்டேனும்
உன்னை விடமாட்டேன்.

பிரசவ வலியும்
சுகமாகிறது-உன்
நினைவுகளைப்
பிரசவிக்கும் போது

எழுத்துகளும்
உயிர் பெறுகிறது
உனது பெயரினை
எழுதும்போது.

நிழல்களும்
செத்துமடிகிறது
நாம் பிரிந்து
செல்லும்போது.

ஹார்மோன்கள்
நடத்தும்போரில்
சப்தமில்லாமல்
முத்தங்களால் மட்டும்
யுத்தம் வேண்டும்

உனது கரங்கள்
பிடித்து எப்பொதும்
நடப்பதற்கு
வரங்கள் வேண்டும்.

அம்மா,நான்
வாசம் செய்ய
கருவறை கொடுத்த தாய்.
நீயோ ,நான்
உயிர்வாழ
சுவாசம் கொடுத்’தாய்’.

என் தாயின்மேல் கொண்ட
அன்பினில் அதிகம்
பங்குபெற வந்தாய்
எந்தன் தாயுமானாய்.

அன்பே
நீயில்லாமல்-எனக்கு
மறுஜென்மம் இருந்தால்
என்தாயின் கருவறையே
கல்லறையாகட்டும்.

உன்னோடு எனக்கு
மறுஜென்மம் இருந்தால்
என்கல்லறையே
என்னை சுமக்கும் தாயின்
கருவறையாகட்டும்


Comments