சிதைந்த காதல் வாழ்க்கை

ஒத்தையில நீ போயிட,
செத்த பிணமாக நான் ஆயிட்டேன்.
யார நம்பி போன
உருக்குலைஞ்சு நிக்க
யாரு சொன்ன என்ன
கருக்கலைஞ்சு வந்துருக்க...
கழுத்துல தாலி இல்ல
வயித்துல புள்ள இருக்குனு

உலகம் இகழும்னு
பயந்தாயோ
இந்த  தாயும்
உன்ன மன்னிப்பானு மறந்தாயோ..
உன்ன மானத்தோட
வளத்து ஆளாக்க
பல அவமானத்தோட
என்உடல வித்து
காசு சேக்க
போராடுனது இதுக்காகவா?
ஒரு வார்த்தையில
உன் விருப்பத்தை சொல்லிருந்த
உலகத்தையே எதித்தாவது
உன்ன சேத்து வச்சுருப்பேனே...
உன் தாயி
விபச்சாரி சொன்ன
வெறுத்துருவாளோனு
சொல்ல மறுத்துடியோ?
காதலப்பத்தி
எனக்கு புத்தி
இல்லன்னு நினைச்சுடியோ...
காதலுக்காக இந்த
பேதை  போராடிய
கதை அறிவாயோ?
காசு இல்லாதவனிடம்
மனசு கடலென
கொட்டி கிடந்தது,
எட்டுப்பட்டிக்கும்
கொடிகட்டிப் பறந்த
மாவீரன் அவன்
பட்டினத்துல இருந்து  திருவிழாவுக்கு வந்திருந்தான்
திருவிழா கூட்டத்துல
நான் நிக்க
ஜல்லிக்கட்டுப் போட்டியில
என் மனச தொலைக்க
துள்ளிக்குதிச்ச
என் ஆசையெல்லாம்
அவன் அடக்க
என் ஆச ராசா
பத்திரமா கொள்ளையடிச்சு போனான் என் மனச.
பத்துநாள் திருவிழா சந்தையில
மறக்காம சந்திக்க
மறவா வந்துபோனான்
என்னப் பாக்க
ஒத்த பார்வையில
மொத்த உசுர எடுத்துப்புட்டான்
அவன் கொடுத்த முத்தத்தில
சுத்தமாக்கி கரச்சுபுட்டான்
சத்தமேதும் இல்லாம
இதயத்துல இடம்புடுச்சுட்டான்
காதலிச்சவன
கரம்பிடிச்சு வாழ்ந்திடணும்னு
அடம்பிடிச்சு காத்திருந்தேன். முகம் தெரிய எட்டப்பன்
எங்க காதல அப்பன்ட சொல்ல
அவரோ எங்க காதல்
முகவரியை அழிக்க
இரவிலே முடிவுகள் பல எடுக்க
விடிந்ததும் இடிந்து
போனது என் காதல் கோட்டை
தப்பிக்க முயற்சிக்க
எதுவும் பலன் கொடுக்காம போக
ஆசையாய் ஊட்டி
வளத்த அண்ணனுங்க
முதலாக அடித்து அடக்க
அடங்கிபோனேன்
ஜாதி வெறி பிடிச்ச
அப்பன்,அண்ணனுங்க
புத்தி பேதலிச்ச
மாமனுக்கு கட்டி வச்சாங்க.
மஞ்ச நிறத்துல
தூக்கு கயிறோன்னு
என் கழுத்துல
மாட்டிக்கிட்டு
மெல்ல மெல்ல
உயிர் குடிக்க
செத்துப் போனேன்.
என்ன கட்டிக்கிட
தலையாட்டி பொம்மை ஒன்னு
முதலிரவுக்கு கட்டிலில
காத்திருக்க
ஒளி வீசிய
அரிக்கன் விளக்கோ
சூரியனாய் பொசுக்க
உள்ளே சென்றேன்.
மாமன் விளைக்கை
அணைத்து
என்னை அணைக்க
பூப் படுக்கை
அக்னிப் படுக்கையாய்
சுட்டெரிக்க
என் பெண்மையை
விருப்பமில்லாமல்
தொலைக்க
துடித்துக் கொண்டிருந்த 
காதல் இதயம்
துடிக்காம
வெடித்துச் சிதறக் கண்டேன்.
வாழ்க்கைப் பிடிக்காம
வீட்ட விட்டு போனேன்,
என்னப் பிடிச்ச
சனியனோ விடாம துரத்த,
பழைய கட்டிடத்துல அடைக்கல மானேன்.
வெறிச் சோடி கிடந்த
கட்டிடத்துல
குடித்துக் கொண்டிருந்த
வெறி நாய்
கூட்டத்துக்கு பலியாடானேன்.
நாலு சுவத்துக்கு மத்தியில
கத்தி கதறி பாத்தேன்
சுத்திமுத்தி கேட்க
ஒரு நாதி இல்ல.
எதித்து தாக்க சக்தி
இல்ல காம வெறி ஆட்டத்துக்கு விருந்தானேன்.
கொஞ்சம்கூட இரக்கமில்ல
நெஞ்சுமேல வெறியாட்டம்
பொழுது விடிஞ்ச
வெளிச்சம் வரும்
எனக்கோ இருட்டுல
நடந்ததெல்லாம்
தெளிவு பட
இருண்டது மிச்சமிருந்த
வாழ்க்க.
கடைசியா அவன
ஒருதடவ பாத்து
வேறொருத்திய கட்டிகோனு சொல்ல
காத்திருந்தேன்.
முந்தானையில் முடிஞ்சு வச்சிருந்த
விலாசமும்
நான் நாசம் போன
இடத்துல  தொலஞ்சுருச்சு
போராடி தேடிப் பாத்தேன்
ஒரு மாசம் போச்சு
பெரும் இடி விழுந்துச்சு
கருவா என் வயித்துல
நீ வந்து தங்கிபுட்ட.
நானா இருந்துருந்த செத்துருப்பேன்
நீயும் வந்ததால வாழ
துணிந்து நின்னேன்
அடைக்கலம் தேடி அலஞ்சேன்
கிடைச்ச இடத்துல தங்கி கழிச்சேன்
எனக்கே தெரியாம
நானும் விலைக்கு போயிருந்தேன் என்பதை
நீ பிறந்த பின்தான்
நானும் அறிஞ்சேன்
இப்படித்தான் விபசாரத்துல நுழைஞ்சேன்.
மொத்ததுல உன்ன
பெத்த அப்பன் பேரு எனக்கே தெரியாம
என் உடம்ப வித்து
உன்ன வளத்த
கதைய  சொல்லிருந்த
இந்த நிலைக்கு  வந்திருக்க மாட்டாயோ...
என் மகளே கண்மணியே
கேளடி என் செல்லமே உன்னையும் என்ன மாதிரி
ஆளாக்க எனக்குள்ள
சக்தி இல்ல
என் வாழ்க்கையதான்
இருட்டப்பாத்த குருடாக
கழிஞ்சுறுச்சு
கண்ண விழிச்சுகிட்ட
கனவெல்லாம் அழிஞ்சுபோகுமே 
அதுபோல நடந்ததெல்லாம் கெட்ட கனவாக நினைச்சுகிட்டு
நீயாவது
கஷ்டப்பட்டு முடிச்ச
பட்டத்துக்கு ஏத்த
வேலைய பாத்து

முன்னேற  வாழ்த்துகிறேன்

Comments