புத்தகக் காதல்

பேருந்தில் தொடங்கியது
ஒரு அழகான ஆழமான
காதல்...
அவளது அங்கத்தை
அங்குலம்  அங்குலமாக
அளந்து பார்த்தது - எனது
கண்கள்...
என்ன
விந்தை செய்தாளோ

விந்தணுக்கள் இல்லாமலே
சிந்தனையில் கருத்துக்களைப் பிறக்கச் செய்தாள்...
தொடக்கத்தில் தயக்கத்துடன் செலுத்திய என் பார்வையை
போக போக
மயக்கத்தில்  ஆழ்த்தி
மனதை வீழ்த்தி விட்டாள்..
எந்த அரங்கத்தில்
இயற்றினானோ தெரியவில்லை
இடையில் அமைந்திருந்த
அந்தரங்கத்தில்
என் மனதை தொலைத்து விட்டேன்...
அவள் இடையை ரசித்ததிலிருந்து
குனிந்த தலையை நிமிராமல் நடக்க வைத்தது அந்த நடைஅழகு
அவளிடம் பேச வில்லை
ஆனாலும் என் கண்களுக்கு மட்டும்
விருந்தளித்து  கொண்டிருந்தாள்
வசிகரித்த சரீரத்தினால்.
என் வீட்டைக்
கடந்து சென்ற பின்னும்,
என் கால்களும்
மறந்துபோய் பின்
தொடர்ந்து  செல்கிறது...
அவள் அழகை
தலைகுனிந்து
வாசித்து ரசித்தவாறே
வீதியில் நடந்து
எதிரேவரும் அழகான
பெண்களைக் கவனிக்க
மறந்து செல்கிறேன்
காதலுக்கு உருவம்
ஏதும் கிடையாது..
வந்தால் உயிரை
உருக்குலைக்காமல் செல்லாது
பார்த்ததும் காதல்
வர வைக்க -பல
பெண்கள் உண்டு...
படிக்க படிக்க
காதலை  காதலிக்க
வைக்கும் அளவில்-சில
புத்தங்கங்களே உள்ளன.
அப்படியொரு புத்தகத்தின் மீது
கொண்ட காதல்
வார்த்தைகளில் சொல்ல முடியாது
கவிதை வரிகளில்
எழுத முடியாது
உணர்வுகளால் உணர
முடியாது
உயிருள்ள வரை
உருக்கிக் கொண்டிருக்கும்.
காதலை உணர  வைக்கும்
அனைத்து புத்தகங்களும்
எனக்கு காதலி தான்...

Comments