கனவுக்காதலியின் அழகு

கொலோசியத்தை
தங்கத்தில் செய்து –அவள்
உச்சியின் அழகிற்கு
மகுடம் சூட்டிட
வேண்டும்.

நைல் நதி
ஏற்படுத்திய
மெல்லிய சுவடு-அவளது

நெற்றியின் வகிடு.

எல்லையில்லாமல்
நீண்டுபரவும்
கருப்பு-சீனப்
பெருஞ்சுவர் –அவளது
கூந்தல்.

இருட்டில்
எட்டிப்பார்க்கும்
சூரியன்-அவளது
நெற்றிப்பொட்டு...
அது
சுற்றிவரும்
பாதை-அவளது
நெற்றி...

கருமேகங்கள்
ஏற்படுத்திய
இரு மின்னல்கீற்றுகள்
நெற்றியின் கீழ்
வளைந்திருக்கும் –அவளது
புருவங்கள்.

மழைக்கு முன்
வண்ணமிகு தோகையை
விரித்தாடும்
மயிலைப்போல்,
ஒவ்வொரு
கொலைக்கு முன்னும்
வசியமிகு தோகையுடைய
இமைகளை சிமிட்டி
எச்சரிக்கிறாள்...

கருப்பனைக்
கவிஞனாய்க் காட்டிய
வெண்மேகக்கடலில்
மிதக்கும்
கருப்புப்பந்து-அவளது
கருவிழிகள்.

ஆண்கள் பலரின்
இதயங்களை
அடைத்து வைத்திட்ட
சவப்பெட்டி-அவளது
கண்கள்.

என்னிதயம்
முதன்முதலில்
சறுக்கி விழுந்த
முதலிடம்-பனிச்
சறுக்குகள் கொண்ட
மூக்கின் நுனி.

இரண்டு
அடுக்கிலமைந்த
செர்ரி பழங்களின்
விளைநிலம்-அவளது
செவ்விதழ்கள்.

மழலை மொழிகளை
வரவேற்கும்
சிகப்பு கம்பளமான
நாக்கினை
காக்கின்றனவோ,
மல்லிகை மொட்டுக்களை
கவசமாக அணிந்த
படைவீரர்களின்
அணிவகுப்பு-அவளது
பற்களின் சீரமைப்பு.
ஆண்கள் பலர்
தாடி வளர்க்க
வழிசெய்கின்றனவோ
ஆப்பிளின்
அடிப்பாகத்தை
திருடியமைத்த-அவளது
நாடி.

பௌர்ணமி
நிலவைப் பிய்த்து
கன்னங்களைச்
செய்ததினால்
உண்டாயினவோ
மூன்றாம்பிறை நிலவு.

காதல் ரோஜாவின்
இரு செவிமடல்களும்
ரோஜாவின்
செவ்விதழ்களால்
செய்யப்பட்டனவோ.

மூன்று அடிகளில்
அமைந்த ஹைக்கூ
கவிதையைப்போல
எழுத்து,இலக்கணமற்ற
மூன்று அங்குல
ஹைக்கூ கவிதை-அவளது
கழுத்து.

இளையராஜா
இசைத்திடாத
இசையுலகம் கண்டெடுத்த
இசைக்கருவி-அவளது
குரல்வளை.

அர்ஜுனனின்
காண்டீவம்
களவாடப்பட்டு
வடிவமைக்கப்பட்டன-அவளது
தோள்பட்டைகள்.
மச்சுப்பிச்சுவின்
மேகம் தவழும்
மலைகள்கூட
மோகம் கொண்டு
பார்க்கின்றன
காலத்தால் முந்தியிருக்கும்
பிரமிடுகளைக் காட்டிலும்
அதிசயமிக்க
காமத்தால் முந்தியிருக்கும்
அவ்விரு பிரமிடுகளை.

குற்றால
அருவிகள்
தவழ்ந்து விழும்
பாறைகள்தானோ-அவளது
முதுகுப்பகுதிகள்.

மௌன ராகம்
இசைக்கும்
அற்புதப்
புல்லாங்குழல்கள்-அவளது
கைவிரல்கள்.

மணல்மேடுகள்
இல்லாத ,
புயல்காற்று வீசாத
அமைதிப் பாலைவனம்
நகங்கள்.

எனது
ஆயுள்ரேகையின்
வீழ்ச்சியினாலே
எழுச்சியானதோ-அவளது
ஆயுள்ரேகை.

செம்பருத்தியின்
மகரந்தங்களைத்
தாங்கிப்பிடிக்கும்
மகரந்த்தக்குழல் போல்
தலைமுறைகளைத்
தாங்கிப்பிடிக்கும் குழல்
அவள் தொப்புள்கொடி.

தூக்குனாங்குருவிக்கூட்டில்
வெண்ணெய் தடவிய
மெல்லிய இடையும்;
நீரமைப்பில் ஓரை மிஞ்சும்
ஒரு ஆண்மகன்
தடுக்கிவிழும் அற்புதப்
பள்ளத்தாக்கும்
ஒருங்கமைந்த –அவளது
இடைப்பகுதி.

என்னை
நெருங்கையில்
சங்கீதமாக
நீங்கையில்
சங்கின் நாதமாக
கேட்கிறது-அவளது
கொலுமணியோசை.

வள்ளுவன்
எழுத மறந்த
இரண்டடி குறள்
என் கனவுக்
காதலியின்
காலடிகள்.

உனது
கள்ளச்சிரிப்பினால்
எத்தனை
உள்ளங்களை
களவாடினாய்.

தங்க நகைகளை
அணிந்துள்ளாயோ
இல்லை இல்லை!
அவைதான்
தங்கத்தாமரை மகளை
அணிந்துள்ளன.
மீட்பர் இயேசுவைவிட
ஒருபடி முன்னேறி,
தன் அழகினாலே
பகைவனை
மன்னிப்பு
கோரவைக்கிறாள்...

பெண்ணே!
நீயொரு
ஆண்,பெண்
மட்டும் கட்டிய
தாஜ்மகாலா அல்லது
ஒரு ஆண்மகனின்
உளி செதுக்கிய
எல்லோராவின்
சிலையா?

வள்ளுவன்
இருந்த்திருந்தால்
உனக்காகவே
காமத்துப்பாலில்
புது அதிகாரங்களை
எழுதியிருப்பார்.

உன் அழகை வர்ணிக்க
முதன்முதலாக
என் தமிழ்த்தாயிடம்
வார்த்தைகள்
இல்லாமல்
போனதேனோ..?

அவைகள்
கூட்டிச்சொல்வேன்
அதிசயங்களைக்கூட
அதிசயமாகப்
பார்க்க வைக்கும்
வசியம் கொண்டவள்
நீயென்று.


மூன்றாம் உலகப்போர்
தொடங்கினால்
பெண்ணே –அது
உன் அழகிற்காக

மட்டும்தான்.

Comments

Post a Comment