ஒரு அம்மாவின் கர்வம்

ஏழு ஸ்வரங்களே 
அழுகுரலின் 
ஓ(இ)சையைக் கேட்டு
உன் இசையின் ராகம்
மறந்தாயோ...

செவ்விதழ்கள் கொண்ட
ரோஜா மலரே-இவளின்
செவ்விதழ்களைக் கண்டு
வெட்கம் கொண்டாயோ...

நேற்றுவரை நீதான்
அழகான மலரென்று
எண்ணியிருந்தேன்...
இன்றோ உன்னைவிட
அழகான மலர்
மலர்ந்துள்ளது ரோஜாவே...

உலகிற்கு விடியலைத்
தருகிற சூரியனே
எனது வாழ்விற்கு
ஒரு புதுவிடியல்
விடிந்துள்ளது பார்...

இருட்டிற்கு அழகு சேர்க்கும்
பொன்நிலவே..
பகலில்கூட-அவள்
கண்களுக்கு அழகு சேர்க்கும்
பொன்நிலவைப் பார்...

இயற்கையின்
எழில்மிகு அழகுகொண்ட
இமயமே
இமைதிறந்து பார்
என் அழகு தேவதையை...

இரவில் வானை
அலங்கரிக்கும் வெள்ளை
நட்சத்திரங்களே
இவளின் வெள்ளைத்தேகத்தில்
கருப்பு நட்சத்திரங்களைப்
பார்த்தாயோ...

வெண்மேகங்களுக்கு பதில்
பஞ்சுபோன்ற-இவளின்
பொன்பாதங்களைத்
தலையணையாய்
வைத்திட ஆசை...

அண்டார்டிகாவின்
பனிசரிவுகளை விடவும்
இவளின் இரு
கன்னங்களும்
மென்மையானவை...

பறவைகளே நீ
இறக்கைகளால்
விண்ணை எட்டுகிறாய்...
இவளோ நம்பிக்கையால்
விண்ணை எட்டுகிறாள்...

இவளின்
புன்னகைக்காக - பல
பொன்னகை
மாளிகைகளைக்கூட
கொடுக்கலாம்...

தலைசிறந்த சிற்பிகளே
வாருங்கள்,
உங்கள் கைகளைவிட
என் கர்ப்பப்பை
செதுக்கிய சிற்பத்தின்
அழகினைக் காண்பதற்கு...

கவிதைகளே
உங்களை மறுசீராய்வு
செய்துகொள்ளுங்கள்
ஒரு அழகான
கவிதை பிறந்துள்ளாள்.

எனது
முத்தமழைகளின்
எண்ணிக்கையை விட
மழைத்துளிகளின்
எண்ணிகையும்
குறைவுதான்...

எனது முத்தமழைக்கு
உருவான
இருவானவில்கள் தான்
அவளின் புருவங்கள்...

தென்றல் காற்றே
இவள் மூச்சுக்காற்றை
சுவாசித்து உன்னை
புதுப்பித்துக் கொள்ளுங்கள்...

கங்காருவின்
குட்டிகள் கூட
பொறாமைப்படுகின்றன.
இத்தாயின் அரவணைப்பில்
என் தாயும்
தோற்றுப்போகிறாள் என்று...

நான் மறுபடியும்
பிறந்ததினால் அடைந்த
ஆனந்தக்கடலை விட
பசுபிக்கடலின் ஆழமும்
குறைவுதான்...

இவள் பிறக்கும்போது
எனக்கு மறுபிறவி
கொடுத்த இவளும்
எனக்கு அம்மாதான்...

எனது உலகை
அவளுக்காக மாற்றியமைக்க
வந்தநாள் தான்- அவளின்

பிறந்தநாள்....

Comments

Post a Comment